கடல்நீரை தடுக்க தடுப்பணை முதல்வர் தலையிட வலியுறுத்தல்
நாகப்பட்டினம்:நாகை அருகே வெட்டாற்றில் கட்டப்படும் தடுப்பணை வேறு இடத்திற்கு மாற்ற, முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமம் கடல்பரப்பில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் வெட்டாற்று கரையில், 49.50 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில்,109 மீட்டர் அகலத்தில், கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில், புதிய தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது.கட்டப்படும் தடுப்பணையால் கடல் நீர் உட்புகுந்து 30 கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கும். விளைநிலங்கள் பாழாகும். தடுப்பணையை பூதங்குடியில் இடம் மாற்றி கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகை, கலெக்டர் அலுவலக வாயிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100 பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.அப்போது பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், இயற்கைக்கு மாறாக அறிவுபூர்வமற்ற முறையில் தடுப்பணை கட்டப்படுகிறது. தடுப்பணை கட்டுமானத்தில் முதல்வருக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. முதல்வர் தலையிட்டு பூதங்குடியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றார்.