நாமக்கல்: ''ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிகளில் நடக்கும் ö கால்லிமலை வல்வில் ஓரி விழாவுக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் பேசினார். கொல்லிமலையில், வல்வில் ஓரி விழா கொண்டாடுவது சம்மந்தமாக அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து பேசியதாவது: ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரு தினங்கள் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுவிழா சிறப்பாக நடக்க உள்ளது. அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட் உதவிகளும் வழங்கப்பட உள்ளது. வனத்துறை சார்பில், வனப்பாதுகாப்பை வலியுறுத்தி மலைப்பாதையில் வரவேற்பு வளைவு, விளம்பரப் பலகை அமைக்கப்பட உள்ளது. விழாவுக்கு வருகை தரும் மக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தரப்பட உள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், விழா நடக்கும் இரு தினங்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வல்வில் ஓரி வாழ்கை வரலாறு சிறப்பிக்கும் வகையில், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட உள்ளது. தீயணைப்புத் துறை மூலம் மக்களிடையே தீத்தடுப்பு விழிப்புணர்வு குறித்த நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட உள்ளது. விழாவில் அதிகளவு மக்கள் பங்கேற்பர் என எதிபார்க்கப்படுவதால், ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவக் குழு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், தோட்டக்கலைத்துறை மூலம் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட உள்ளது. விழாவின் இரண்டாம் நாளான 3ம் தேதி, வில்வித்தைப் போட்டி, நாய்க் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அரசு திட்டம் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையில், 20 துறை பங்கேற்கும் பணி விளக்கக் கண்காட்சி நடக்க உள்ளது.பள்ளி மாணவ, மாணவியர், பல்வேறு கலைக்குழுவினர் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா சிறப்பாக அமைய, அனைத்து துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.