| ADDED : மே 28, 2024 07:08 AM
ப.வேலுார் : பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில், பரமத்தி பைபாஸ் சாலையில் கனரக வாகனங்களில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ப.வேலுார் சுற்று வட்டார பகுதிகளில், சாலையில் செல்லும் வாகனங்களை சிறப்பு சோதனை செய்ய, கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் அறிவுறுத்தல்படி, பரமத்தி பைபாஸ் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன், நேற்று வாகனங்களை சிறப்பு சோதனை மேற்கொண்டார்.இதில், லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம், டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையாக, ஒரு லட்சத்து, 5,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தை மீறிய, 30 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கப்படுகிறதா என கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து, 18 வயது நிரம்பாத சிறார்கள் டூவீலர் ஓட்ட அனுமதித்தால், சிறார்களின் பெற்றோர்களுக்கு, 25,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என, குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.