மாசிலா அருவி சாலை சரி செய்யப்படுமா
மாசிலா அருவி சாலை சரி செய்யப்படுமாசேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. மூலிகைகள் நிறைந்த இந்த மலையில், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு அடுத்தப்படியாக மாசிலா அருவி உள்ளது. ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு செல்ல, 1,500 படிக்கட்டுகள் செங்குத்தாக உள்ளதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்கு செல்லாமல், மாசிலா அருவியில் குளித்து செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், மாசிலா அருவிக்கு செல்ல சுங்க கட்டணம் வசூல் செய்யும் நிலையில், அருவிக்கு செல்லும் நுழைவாயில் முதல், 1 கி.மீ., துாரத்திற்கு சாலை குண்டும் குழியுமாக ஜல்லிகள் கொட்டி வைத்துள்ளதால், டூவீலர்கள், நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில்,'மாசிலா அருவிக்கு தினமும் ஏராளமானோர், வெளியூரில் இருந்து வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வருகின்றனர். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த தார் சாலை, இதுவரை சரி செய்யாமல் குண்டும் குழியுமாக மாறி ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளது. இதனால், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, யூனியன் நிர்வாகம் இந்த சாலையை சரி செய்ய வேண்டும்,' என்றனர்.