விடுமுறையால் கொல்லிமலைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
சேந்தமங்கலம், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையால், கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தமிழகத்தின் சுற்றுலா தலமாக விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வாரவிடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். தற்போது, காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நேற்று கொல்லிமலைக்கு வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். அவர்கள், ஆகாய கங்கை, நம்மருவி, மாசிலா அருவி, சிற்றருவி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா மற்றும் அரப்பளீஸ்வரர், எட்டுக்கை அம்மன், மாசி பெரியசாமி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். தொடர்ந்து வீட்டிற்கு புறப்படும்போது, சோளக்காடு என்ற பகுதியில் பழங்குடியினர் நடத்தும் சந்தையில், கொல்லிமலை வாழைப்பழம், பலாப்பழம், அன்னாசி பழம் மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றனர்.