3 ஆண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.2,965 கோடி கடன் உதவி வழங்கல்
'3 ஆண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம்ரூ.2,965 கோடி கடன் உதவி வழங்கல்'சேலம், ஆக. 30-சேலம், சின்னதிருப்பதி நகர கூட்டுறவு சங்கத்தில், 'நிறைந்தது மனம்' நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 47.30 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவிகளை, கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் கடந்த, 3 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு, 2,965 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 3 ஆண்டுகளில் கூட்டுறவு நிறுவனங்களில் நகை கடன் பெற்ற, 1,03,986 பயனாளிகளுக்கு, 471.30 கோடி ரூபாய், 51,903 மகளிருக்கு, மகளிர் சுய உதவி குழு கடன், 132.88 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,79,548 விவசாயிகளுக்கு, 2,223.76 கோடி ரூபாய் மதிப்பில் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.இதுபோன்று, கூட்டுறவு துறையின் பல்வேறு திட்டங்கள், மக்கள் நேரடியாக பயன்பெறும்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த நிகழ்ச்சி மூலம், 3 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 39 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவி உள்பட, 47.30 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பெறும் பயனாளிகள் உரிய முறையில், வாழ்வின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதில், தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், துணைமேயர் சாரதாதேவி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.