| ADDED : மே 04, 2024 07:47 AM
சேந்தமங்கலம் : துாங்கி கொண்டிருந்த முதியவரின் கையை வெட்டி, பணம் கேட்டு மிரட்டிய, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் அருகே, பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன், 77. இவரது மனைவி வாங்கலாயி, 70. இவர்கள், 30ல் வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிற்குள் புகுந்த, 2 கொள்ளையர்கள் அங்கு உறங்கி கொண்டிருந்த பெரியண்ணனின் கையை கத்தியால் வெட்டி, பணம், நகைகளை எடுத்து கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர்.இதையடுத்து, அவர்கள் சத்தம் போட்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் அந்த இரண்டு கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து புகார்படி, புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பெரியண்ணனை வெட்டியது, கல்குறிச்சியை சேர்ந்த அஜீத், 24, தென்னரசு, 23, ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.