மோகனுார் : நாமக்கல், மோகனுார் ராசி குமரிபாளையம் தெருவை சேர்ந்தவர் செல்ல ராசாமணி, 63. விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவராக உள்ளார். இவருக்கும், குமரிபாளையம் ஊராட்சி, சங்கரன்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி, 66, என்பவருக்கும், பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மோகனுார், கலைவாணி நகரில் உள்ள அருணாசலம் என்பவரின் வீட்டிற்கு இருவரையும் அருணாசலம் அழைத்தார். அங்கு சென்ற செல்ல ராசாமணி, தனக்கு தரவேண்டிய, 60 லட்சம் ரூபாயை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பொன்னுசாமி, செல்ல ராசாமணியை தரக்குறைவாக பேசி, பணத்தை தர முடியாது என்று கூறியதுடன், பொன்னுசாமியின் மகன் சித்தார்த், 40, செல்ல ராசாமணியை உதைத்துள்ளார். இதில் காயமடைந்த செல்ல ராசாமணி, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மோகனுார் போலீசில் அளித்த புகார்படி, எஸ்.ஐ., இளைய சூரியன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.அதேபோல், பொன்னுசாமி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொன்னுசாமி கொடுத்த புகார்படி, செல்ல ராசாமணி மீதும் மோகனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.