கோடையால் ஆகாயகங்கைநீர்வீழ்ச்சியில் குறைந்த தண்ணீர்
சேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த செல்கின்றனர். அவர்கள், மூலிகைகள் நிறைந்த ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவியில் குளித்து செல்கின்றனர். பின், அரப்பளீஸ்வரர், எட்டிக்கையம்மன், மாசி பெரியசாமி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், இந்தாண்டு கொல்லிமலையில் பெய்த அதீத மழையால், அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பின், இந்த தடை நீக்கப்பட்டாலும், கடந்த மாதம் வரை அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டி வந்தது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.தற்போது, கோடை துவங்குவதையொட்டி, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அருவிகளில் நாளுக்கு நாள் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால், ஆர்ப்பரித்து கொட்டிய ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில், நேற்று தண்ணீர் குறைந்தளவிலேயே கொட்டியது. இந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.