ப.வேலுார், ஆக. 22--- 'பரமத்தி வேலுார் தாலுகாவில், காலாவதியான எப்.சி., இன்சூரன்சுடன் உலா வரும் டவுன் பஞ்சாயத்து வாகனங்கள், சோதனை செய்து பறிமுதல் செய்யப்படும்' என, மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, ஒரே நாளில் அனைத்து வாகனங்களுக்கும், எப்.சி., செய்ய ஊழியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகாவில், ப.வேலுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி ஆகிய, ஐந்து டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. இப்பகுதிகளில் குப்பை சேகரிக்க, டவுன் பஞ்சாயத்து சார்பில் மினி லாரி, டிராக்டர்கள் என, 11 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், ஏழு வாகனங்களுக்கு, எப்.சி., இன்சூரன்சும், மூன்று வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் மட்டும், பல மாதங்களுக்கு முன்பே காலாவதியானது. ஆனால், விதிமுறை மீறி இயக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், குப்பை சேகரிக்க சென்ற டிராக்டருக்கு, எப்.சி., இன்சூரன்ஸ் இல்லாததால், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன், பறிமுதல் செய்தார். மேலும், 'காலாவதியான எப்.சி., இன்சூரன்சுடன் உலா வரும் டவுன் பஞ்சாயத்து வாகனங்கள், சோதனை செய்து பறிமுதல் செய்யப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.இதனால், ப.வேலுார், பொத்தனுார், பாண்டமங்கலம், பரமத்தி ஆகிய, நான்கு டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான குப்பை அள்ளும் மினி லாரி, டிராக்டர்களுக்கு எப்.சி., செய்ய, நேற்று ஒரே நாளில், பரமத்தி மோட்டார் வாகன அலுவலகத்தில், அதன் ஊழியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.