| ADDED : மே 30, 2024 08:54 PM
பள்ளிப்பாளையம்:நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களின் கடன், வறுமை, குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி, பணத்தாசை காட்டி கிட்னி விற்பனைக்கு துாண்டில் போடும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சர், நாமக்கல் கலெக்டர் ஆகியோருக்கு, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., 6வது வார்டு கவுன்சிலர் பாலசுப்ரமணியம் கடந்த, 1ம் தேதி, புகார் மனு அனுப்பி இருந்தார்.இதையடுத்து, பாலசுப்ரமணியம், சம்மந்தப்பட்ட கிட்னி புரோக்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அந்த பகுதிக்கு நேரில் சென்றும் திருச்செங்கோடு டி.எஸ்.பி., விசாரணை நடத்தினார். இதன் பின்னர் விசாரணை தொய்வு நிலையில் இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம், கேரள மாநிலம், கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கிட்னி கொடுக்க வந்தவர்களில் சிலர், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதியில் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வெளியான பின், பள்ளிப்பாளையம் போலீசார் மீண்டும் விசாரணையை துவக்கி உள்ளனர்.