புதிய பாரத எழுத்தறிவு தேர்வில் 12,889 பேர் பங்கேற்பு
நாமக்கல்: தமிழகத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் வகையில், 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' 2022-23ம் ஆண்டு முதல், 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 2025-26ம் கல்வியாண்டில், பயிற்சி அளிக்கப்பட்டு வரும், 12,889 கற்போர்களுக்கு, 901 மையங்களில், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவிற்கான தேர்வு நேற்று நடந்தது.காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்பட்டது. தேர்வு மையங்களில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, காவேட்டிப்பட்டி, பெரியப்பட்டி தேர்வு மையங்களை ஆய்வு செய்தார்.மேலும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், விரிவுரையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார அளவில் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் அனைத்து மையங்களையும் பார்வையிட்டனர்.