16, 17, 23, 24ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம்
நாமக்கல், நவ. 10-'வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் சிறப்பு முகாம், வரும், 16, 17, 23, 24 ஆகிய நான்கு நாட்கள் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில், கடந்த அக்., 10ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த, 29 முதல், வரும், 28 வரை, புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்வது தொடர்பாக சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்த காலத்தில், வரும், 16, 17, 23, 24 ஆகிய, நான்கு நாட்கள், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், சிறப்பு முகாம் நடக்கிறது.அப்போது, புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம். மேலும், போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் இருப்பு வைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், 18 வயது பூர்த்திடைந்த அனைவரும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.மேலும், இந்த சிறப்பு முகாம்களை பார்வையிடவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும், வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழக உப்பு கழக மேலாண் இயக்குனருமான மகேஸ்வரன், நாளை, நாமக்கல் மாவட்டம் வருகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.