ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் கத்திக்குத்து ப.வேலுார் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
ப.வேலுார், ப.வேலுார் அருகே, ஆடல்-பாடல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திய வாலிபருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே கரட்டூர், பிலிக்கல்பாளையத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. கடந்த, 2018 மார்ச்சில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது. அன்று இரவு, அதே பகுதியில் ஆடல்--பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், பிலிக்கல்பாளையத்தை சேர்ந்த ஜெகதீசன் மகன் வினோதன், 33, என்பவர், மக்கள் கூட்டத்தில் நடனமாடியதால் சலசலப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ராஜா, 40, என்பவர் தட்டிக்கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், வினோதன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாவை சரமாரியாக குத்தினார். இதில் ராஜா படுகாயமடைந்தார். ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பரமத்தி நீதிமன்றம், நேற்று முன்தினம், தீர்ப்பு வழங்கியது. அதில், கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வினோதனுக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து, ஜேடர்பாளையம் போலீசார், வினோதனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.