இடைநின்ற 8,000 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
நாமக்கல், ''மாவட்டத்தில், 3 ஆண்டுகளில் பள்ளிகளில் இடைநின்ற, 8,000 குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்,'' என, மாநில குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் தலைவர் விஜயா பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் பங்கேற்பு துறைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் உறுப்பினர்கள் கசிமீர் ராஜா, மோனா மட்டில்டா பாஸ்கர், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் தலைவர் விஜயா பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், ஆர்.டி.ஐ., சட்டம் மற்றும் விதிகளின் கீழ், 2025-26ம் கல்வியாண்டில், சமூகம் மற்றும் பொருளாதார நலிவுற்றோர் பிரிவில், 147 பள்ளிகளில், 1,591 மாணவர்கள், பள்ளி வாயிலாக, 25 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதி, அனைத்து பள்ளிகளிலும், 'மாணவர் மனசு' என்ற பெட்டி வைக்கப்பட்டு, வாரம் ஒருமுறை மாணவ, மாணவியரின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், 2023-24 முதல், 2025-26 வரை, பள்ளி இடைநின்ற, 8,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் குழந்தை திருமணம் மற்றும் இளம் வயது கருவுற்றல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.நடப்பாண்டில், 45 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அனைவரும் ஒன்றிணைந்து, நாமக்கல் மாவட்டத்தை, குழந்தைகளுக்கான பாதுகாப்பான மாவட்டமாக மாற்ற முன்வர வேண்டும்.இவ்வாறு பேசினார்.ஆர்.டி.ஓ.,க்கள் சாந்தி, அங்கித் குமார் ஜெயின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.