ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் நாகநதி குறுக்கே தடுப்பணை கட்டப்படும்: இ.பி.எஸ்.,
கணியம்பாடி, ''ஜவ்வாதுமலையில் உற்பத்தி யாகும் நாகநதி குறுக்கே தடுப்பணை கட்டப்படும்,'' என, இ.பி.எஸ். பேசினார்.மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நேற்று, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, சட்ட சபை தொகுதிகளில் மக்களை சந்தித்தார். அப்போது செல்லும் வழியில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட கணியம்பாடியில் அவர் பேசியதாவது:கணியம்பாடியில், 400 செங்கல் சூளை உள்ளது. இங்கு, 7,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் தொழில் பாதிப்படையாமல் செங்கல் சூளைக்குத் தேவையான வண்டல் மண் அ.தி.மு.க., ஆட்சி வந்தவுடன், தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜவ்வாதுமலை அமிர்தியில் உற்பத்தியாகும் நாக நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், 25 கிராம ஏரிகள் பாசன வசதி பெறும்.வேலுார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் சப்தல்விபுரம் ஏரி மாசடைவதை தடுக்க, சுத்திகரிப்பு செய்து ஏரியில் விட நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள, நஞ்சுகொண்டபுரம், அரசம்பட்டு, கத்தாளம்பட்டு, நாதநதி கிராமங்களில் மஞ்சள் பயிர் சாகுபடி அதிகமாக உள்ளது.அதனால், இப்பகுதியில் மஞ்சள் குடோன் அமைக்கப்படும். சுற்றுலா பகுதியான, அமிர்தி வனப்பகுதியில் உள்ள வன உயிரியல் பூங்காவை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.