மரவள்ளிக்கு விலை நிர்ணயம் நாளை முத்தரப்பு கூட்டம்
நாமக்கல்: 'மரவள்ளி கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக, நாளை முத்தரப்பு கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நாளை (ஜன., 7) காலை, 10:00 மணிக்கு, மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்து, பயிர் செய்யக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முத்தரப்பு கூட்டம் நடக்கிறது.கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலை வகிக்கின்றனர். நாமக்கல் மாவட்-டத்தில், 1,800 ஹெக்டேர் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. 2024, டிச., 29ல், கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்யும் வகையில், முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.அதன் அடிப்படையில், இந்த முத்தரப்பு கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், சேகோசர்வ் மேலாண் இயக்குனர், தோட்டக்கலை அலுவலர்கள், வேளாண் வணிக அலுவலர்கள் மற்றும் சேகோ ஆலை உரிமையாளர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்க பிரதிநிதிகளும், மரவள்ளி பயிரிடும் விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.