நாமக்கல்: 'புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும், உடனடியாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும்' என, விவசாயிகள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்ல ராசாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் குடும்பத்திற்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வேண்டும் என கேட்டு, இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து காத்துள்ளனர். ஸ்மார்ட் கார்டு கேட்டு பதிவு செய்தவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும், வட்ட வழங்கல் அலுவலரை அடிக்கடி சந்தித்து, தங்களுக்கு எப்போது ஸ்மார்ட் கார்டு கிடைக்கும் என மாதக்கணக்கில் கேட்டு வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில், கடந்த, 6 மாதங்களாக புதிய ஸ்மார்ட் கார்டுகள் எதுவும் வழங்கவில்லை என தெரிகிறது. அதனால், ஏழை எளிய பொதுமக்கள் ரேஷன் கடைகளில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.மேலும், தமிழக அரசு மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் எதுவும் கிடைக்காமலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களின் சிரமத்தை போக்கிடும் வகையில், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கேட்டு மனு செய்துள்ள பொதுமக்கள் அனைவரின் மனுக்களையும் பரிசீலனை செய்து, தகுதியானவர்கள் அனைவருக்கும் உடனடியாக புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க தவறினால், வரும், மார்ச், 15ல், சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், புதிய ஸ்மார்ட் கார்டு கேட்டு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.