பல கோடி சி.எஸ்.ஆர்., நிதி மாவட்ட வளர்ச்சிக்கு பயன்படுமா வெளிப்படை தன்மையில்லை என குற்றச்சாட்டு
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல தனியார் நிறுவனங்களிடம், பல நுாறு கோடி ரூபாய் அளவிற்கு சி.எஸ்.ஆர்., நிதி குவிந்துள்ளது. அது மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் தேவைக்கும் பயன்படாமல் வெளிமாநிலங்களுக்கு செல்வதாகவும், வெளிப்படை தன்மை இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. பல முன்னணி நிறுவனங்கள் உட்பட, 500க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதன் மூலம், பல லட்சம் தொழிலாளர்கள், சிறு, குறு தொழிற்சாலைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றன. ஒவ்வொரு பெரிய நிறுவனங்களும் தங்களது மொத்த நிகர லாபத்தில், 2 சதவீதத்தை சமூக பொறுப்புணர்வு நிதியாக (சி.எஸ்.ஆர்) ஒதுக்கி, சமூகத்தில் இருந்து பெற்றதை, சமூகத்திற்கே செலவு செய்யும் வகையில், கல்வி, சுகாதாரம் மற்றும் இதர வளர்ச்சி பணிகளுக்கு செலவு செய்ய வேண்டும். மாவட்டத்திலுள்ள, 500க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களிடம், பல நுாறு கோடி ரூபாய் அளவிற்கு சி.எஸ்.ஆர்., நிதி குவிந்துள்ளது.மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று தான், சி.எஸ்.ஆர்., நிதி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அதை பயன்படுத்துவதில் வெளிப்படை தன்மை இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்களின் தலைமை அலுவலகம், டில்லி, மும்பை, பெங்களூரு என பிற மாநிலங்களில் உள்ளன. அதனால், அந்நிறுவன சி.எஸ்.ஆர்., நிதி, அம்மாநிலத்திற்கு தான் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சொற்ப அளவில் தான் கிடைக்கிறது எனவும் கூறப்படுகிறது.கோரிக்கைஇதன் ஆதங்கம், ஓசூரில் கடந்த பிப்., மாதம் தொழில்துறை அமைச்சர் ராஜா பங்கேற்ற தொழிற்கடன் வழங்கும் விழாவில் எதிரொலித்தது. அங்கு பேசிய கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், 'சி.எஸ்.ஆர்., நிதியை இம்மாவட்ட மக்களுக்கு தனியார் நிறுவனங்கள் சரியாக பயன்படுத்துவதில்லை. அதை பயன்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜா, 'மத்திய அரசின் சில நிறுவனங்கள், தமிழகத்தில் கிடைக்கும் வருவாயை கொண்டு சென்று, பல மாநிலங்களுக்கு கொடுப்பதை வேலையாக வைத்துள்ளன. அதை தமிழகத்தின் வளர்ச்சிக்குத்தான் செலவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.சரியான கணக்கு இல்லைமத்திய அரசு நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதி மட்டுமல்ல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பல பெரிய நிறுவனங்களின் நிதியும், வெளிமாநிலங்களுக்கு தான் செல்கின்றன. மேலும், வங்கிகளிடமும் பல கோடி ரூபாய் சி.எஸ்.ஆர்., நிதி குவிந்துள்ளது. அவற்றை இம்மாவட்டத்திற்கு பயன்படுத்துவது சொற்ப அளவில் தான், வெளிமாநிலங்களுக்கு செல்வது தான் அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திடமும் எவ்வளவு சி.எஸ்.ஆர்., நிதி உள்ளது. அதில் எவ்வளவு தொகை மாவட்டத்திற்கும், தமிழகத்தின் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற சரியான கணக்கு இல்லை என கூறப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுத்தமான குடிநீர், சாலை வசதி, பூங்கா, அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை சீரமைப்பது, அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பது, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குவது, பெண்களுக்கு சுய தொழில் கற்று கொடுப்பது போன்ற, ஆக்கப்பூர்வமான பணிகளை சி.எஸ்.ஆர்., நிதியில் மேற்கொள்ளலாம். ஆனால், அதை செய்ய பல தனியார் நிறுவனங்கள் முன்வருவதில்லை. குறிப்பாக, தொழில் நகரான ஓசூரில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்கள், மாநகராட்சிக்குள் வளர்ச்சி பணிகள் செய்ய முன்வராமல் உள்ளன. அதனால் பல நிறுவனங்களிடம் சி.எஸ்.ஆர்., நிதி குவிந்திருந்தும், அது அடிப்படை தேவைக்கு பயன்படாமல் உள்ளதால், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் பல பகுதிகள் உள்ளன. சமூக பணிக்கு முக்கியத்துவம்ஓசூர் ஹோஸ்டியா சங்க முன்னாள் தலைவர் கே.வேல்முருகன் கூறுகையில், ''மலை கிராமங்களை அதிகம் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பின்தங்கிய கிராமங்கள் அதிகமாக உள்ளன. மாநகராட்சி பகுதியிலேயே பல அடிப்படை வசதிகள் இல்லை. அதனால், தனியார் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர்., நிதியை வைத்து, இப்பகுதி மக்களுக்கு கல்வி மற்றும் சமூகம் சார்ந்த பல பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வெளிப்படை தன்மையுடன் இம்மாவட்டத்திற்கு நிதியை பயன்படுத்த வேண்டும். வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.