வெண்பட்டு அலங்காரத்தில் ஜொலித்த ஆஞ்சநேயர்
நாமக்கல், வைகாசி அமாவாசையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி வெண்பட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒரே கல்லில் உருவான, 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, தமிழ் மாத முதல் ஞாயிறு உள்ளிட்ட முக்கிய தினங்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும்.அதன்படி, வைகாசி அமாவாசையான, நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வெண்பட்டு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.