ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
நாமக்கல், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார். ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு, 'லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்' என்பது குறித்து மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்.தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு பேரணியில், 'என் வரிப்பணம்; உன் சம்பளம்', 'உன் கடமையை செய்ய நான் ஏன் கொடுக்க வேண்டும் உனக்கு கிம்பளம்', 'அரசு ஊழியர்கள் கடமையை செய்ய லஞ்சம் கேட்டாலோ, மக்கள் நலத்திட்டங்களில் ஊழல், முறைகேடு இருந்தாலோ ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் புகாரளிக்கலாம்' என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மாணவியர் பேரணியாக சென்றனர். பரமத்தி சாலை, பூங்கா சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று, மீண்டும் மோகனுார் சாலையில் உள்ள பள்ளியை சென்றடைந்தனர். பேரணியில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.