லாட்டரி விற்பனையை தடை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
நாமக்கல், 'லாட்டரி விற்பனையை தடுக்க கோரியும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்' கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகா அனிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணியம், 53; இவர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்தபோது, திடீரென தான் கையில் வைத்திருந்த கேனில் இருந்து மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக தடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ப.வேலுார் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், அதிகாரிகளிடம் மனு கொடுத்தால், அவர்களின் நடவடிக்கையால் ஓரிரு நாட்கள் மட்டும் விற்பனை செய்வதை நிறுத்துகின்றனர். பின், மீண்டும் விற்பனையை தொடங்குகின்றனர்.மேலும், அதிகாரிகளிடம் புகார் அளிப்பது தெரிந்தவுடன், கொலை மிரட்டல் விடுக்கின்றனர். பொய் வழக்குபோட்டு விடுவேன் என, சம்பந்தப்பட்ட நபர்கள் மிரட்டுகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், லாட்டரி விற்பனையை தடை செய்ய வேண்டும் என கூறினார். அவருக்கு அறிவுரை கூறி, கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.