மூன்று மாதமாக வங்கி கணக்கு முடக்கம்வாடிக்கையாளர் திடீர் தர்ணா போராட்டம்
நாமக்கல்:நாமக்கல் தனியார் வங்கியில், மூன்று மாதமாக வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, வாடிக்கையாளர் வங்கி முன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.நாமக்கல் - சேலம் சாலையில், கடந்த, எட்டு ஆண்டுகளாக பொம்மம்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ், 36, என்பவர் தனியார் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர், அதே சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில், கடந்த, மூன்றாண்டுக்கு முன் சேமிப்பு, நடப்பு கணக்கு என, ஐந்து வங்கி கணக்குகளை தொடங்கி வரவு, செலவு செய்து வருகிறார். இதற்கிடையே, கடந்தாண்டு டிச., 24ல் இவரது வங்கி கணக்கு அனைத்தும் முடங்கியது. இதனால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில், நேற்று தங்கராஜ் தன் நிறுவன ஊழியர்களுடன், வங்கி நுழைவாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, தங்கராஜ் கூறியதாவது:- தொழில் போட்டி காரணமாக, என் வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நிறுவனத்தை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனவே, சம்பந்தப்பட்ட வங்கி, என் வங்கி கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.