உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை பா.ஜ., நிர்வாகி போக்சோவில் கைது

அரசு பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை பா.ஜ., நிர்வாகி போக்சோவில் கைது

செங்கம், செங்கம் அருகே, கர்ப்பமான அரசு பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. போலீசார் விசாரணை நடத்தி, இதற்கு காரணமான, பள்ளி மாணவ, மாணவியருக்கு கராத்தே பயிற்சியளிக்கும், பா.ஜ., நிர்வாகியை, போக்சோவில் கைது செய்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவரும், பா.ஜ., நகர இளைஞரணி துணைத்தலைவராகவும் உள்ளவர் எழில்இசை, 24. இவர், 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு, கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். தனிப்பட்ட முறையிலும் பயிற்சி அளிக்கிறார். பள்ளிப்பட்டு அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவிக்கு கடந்த, 8 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன், மாணவிக்கு உடல்நிலை பாதித்தது. அவரை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மாணவி, 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. கர்ப்பத்திற்கு காரணம் யாரென போலீசார் கேட்டபோது, மாணவி கூற மறுத்து விட்டார். செங்கம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாணவிக்கு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன், ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மாணவி, அரசு நிதி உதவி பெறும் தனியார் தொண்டு நிறுவன கண்காணிப்பில், தன் பெற்றோருடன் இருந்து வந்தார். போலீசார், சந்தேகத்தின் பேரில் கராத்தே மாஸ்டரும், பா.ஜ., நிர்வாகியுமான எழில்இசை என்பவரின் டி.என்.ஏ.,வை பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் கர்ப்பத்திற்கு காரணமானவர், எழில்இசை என தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் இரவு, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அவர், இதேபோன்று தான் பயிற்சி அளிக்கும் பள்ளி மாணவியரிடம் தவறாக நடந்துள்ளாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், எழில்இசை பயிற்சி அளித்து வரும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை