திருச்செங்கோடு : தனியார் கல்லுாரி பஸ் டூவீலர் மீது மோதிய விபத்தில், 6 வயது சிறுவன் பஸ் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். ஆத்திரமடைந்த கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அம்மையப்பா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 35; அட்டை கம்பெனியில் டிரைவர். இவரும், இவரது, 6 வயது மகன் பிரதீஷ்குமாரும், நேற்று காலை, 8:00 மணிக்கு, டூவீலரில் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் கல்லுாரி பஸ், தோக்கவாடி பஸ் ஸ்டாப் அருகே, சதீஷ்குமார் ஓட்டி வந்த டூவீலர் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.இதில் நிலை தடுமாறி தந்தை, மகன் ஆகிய இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, தந்தை கண்முன்னே, பிரதீஷ்குமார் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதைக் கண்ட சதீஷ்குமார் கதறி அழுதார். பின், படுகாயமடைந்த சதீஷ்குமாரை மீட்ட அப்பகுதி மக்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சம்பவ இடத்தில் திரண்ட மக்கள், கல்லுாரி வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருச்செங்கோடு - ஈரோடு சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த, டி.எஸ்.பி., இமயவரம்பன், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தந்தை கண் முன்னே, 6 வயது மகன் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.