ஓட்டு எண்ணும் முறையில் மாற்றம் பீஹார் தேர்தலில் அமலாகிறது
புதுடில்லி :பீஹார் சட்டசபை தேர்தலில் இருந்து ஓட்டு எண்ணும் முறைகளில் மிக முக்கியமான மாற்றம் கொண்டு வரப் போவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வழக்கமாக ஓட்டுகள் எண்ணும் நாளில் காலை 8:00 மணி முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பின் சரியாக அரை மணி நேரம் கழித்தே, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். சில நேரங்களில் தபால் ஓட்டுகள் எண்ணி முடிப்பதற்கு முன்பாகவே, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடுகின்றன. அதே போல், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிப்பதற்குள்ளாகவே, சில நேரங்களில் தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு விடுகின்றன. இதனால், குழப்பங்கள் நீடிக்கின்றன. இதை தவிர்க்கும் வகையில், ஓட்டு எண்ணிக்கையில் ஒரே மாதிரியான ஒழுங்கு முறையை உறுதி செய்யும் வகையில், எண்ணும் முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி, இனி தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் இறுதிச் சுற்று எண்ணும் பணி துவங்கும் தொடங்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஏதேனும் ஒரு ஓட்டு எண்ணும் மையத்தில் தபால் ஓட்டுகள் அதிக அளவில் பதிவாகி இருந்தால், தாமதம் இல்லாமல், அதை விரைவாக எண்ணி முடிக்க வசதியாக கூடுதல் மேஜைகள் அமைத்து, அதற்கேற்ற ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்த மாற்றம், வரும் நவம்பருக்குள் நடக்கவுள்ள பீஹார் சட்டசபை தேர்தலில் இருந்து அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.