தொழில் உரிமம் பெறாத நிறுவனங்கள் ஆவணங்களுடன் விண்ணப்பித்து லைசென்ஸ் பெறணும்: கமிஷனர் உத்தரவு
நாமக்கல், 'நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தொழில் உரிமம் பெறாத தொழில் நிறுவனங்கள், உரிய உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்' என, கமிஷனர் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான டீ கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், ஜவுளி விற்பனை நிலையங்கள், தொழிற்சாலைகள், ஜூவல்லரி உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள், ஆண்டு தோறும், மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெறவேண்டும். 'ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், அந்த உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளவேண்டும்' என, அரசு அறிவுறுத்தி உள்ளது.அதன்படி, ஆண்டு தோறும், மார்ச், 31க்குள் மாநகராட்சி அலுவலகத்தில், தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்நிலையில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தொழில் உரிமம் பெறாத தொழில் நிறுவனங்கள், உரிய உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.அதையடுத்து, சுகாதார பிரிவு அலுவலர்கள், தொழில் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு நேரில் சென்று, 'உரிய லைசென்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தி நோட்டீஸ் வினியோகம் செய்து வருகின்றனர். அதில், 'அறிவிப்பு கிடைத்த, ஏழு நாட்களுக்குள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, தொழில் உரிமத்தொகையை செலுத்தி, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்' என, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.