மேம்பாலம் அமைக்கும் வரை இணைப்பு; சாலையை பயன்படுத்த மக்கள் கோரிக்கை
நாமக்கல்: 'புதுச்சத்திரம் புறவழிச்சாலையில், மேம்பாலம் அமைக்கும் வரை, தற்போதுள்ள இணைப்பு சாலையை மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்' என, பொதுமக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சேந்தமங்கலம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில், புறவழிச்சாலை இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியின் ஒரு பகுதியாக, புறவழிச்சாலையை கடக்க முடியாதபடி, ஏளூர் பாலத்தின் வழியாக செல்லும் வகையில், இரும்பினாலான தடுப்பு வேலி அமைக்கப்பட உள்ளது. புறவழிச்சாலையில் இருந்து ஊருக்குள் வரும் இணைப்பு சாலையும் இவ்வாறு மாற்றம் செய்வதால், ஊருக்குள் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும். அதனால், பொதுமக்களுக்கு அலைச்சல் உண்டாகும்.பள்ளி, கல்லுாரி வாகனங்கள் ஊருக்குள் செல்ல முடியாத நிலை உருவானால், மாணவ, மாணவியர் பெரும் அவதிக்குள்ளாவர். இப்பகுதியில், கோழிப்பண்ணைகள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்கின்றன. அதனால், புதுச்சத்திரம் புறவழிச்சாலையில் மற்றொரு பாலம் அமைக்கும் வரை பஸ் ஸ்டாப்பை மாற்றம் செய்யாமலும், பைபாஸ் இணைப்பு சாலையை துண்டிக்காமல், மக்கள் பயன்பாட்டிற்கு தற்போதுள்ள நிலையில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.