தனியார் பஸ்கள் போட்டியில் பைக்கில் சென்ற தம்பதி பலி
திருச்செங்கோடு:தனியார் பஸ்கள் போட்டி போட்டு சென்றதில், ஒரு பஸ் மோதி, பைக்கில் வந்த விவசாயி, அவரது மனைவி இறந்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த செம்மாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 46; விவசாயி. இவரது மனைவி ராஜலட்சுமி, 42. இவர்கள் மகள் ராஜேஸ்வரி, 24. இவரது உடல் பரிசோதனைக்காக நேற்று மாலை 5:00 மணியளவில் மூன்று பேரும் ஒரே பைக்கில், திருச்செங்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.வட்டூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற எஸ்.எம்.பி.எஸ்., மற்றும் எம்.ஆர்.என்., என்ற இரு தனியார் பஸ்கள் போட்டி போட்டு, ஒன்றை ஒன்று முந்தி செல்ல வேகமாக வந்தன. அப்போது, எம்.ஆர்.என்., பஸ் எதிரே சாலை ஓரத்தில் வந்து கொண்டிருந்த சண்முகம் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.இந்த விபத்தில், சண்முகம், ராஜலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். ராஜலட்சுமி திருச்செங்கோடு அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். சண்முகம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ராஜேஸ்வரி ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.