ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
புதுச்சத்திரம், ஏப். 30புதன்சந்தை மாட்டுச்சந்தைக்கு, கேரளா வியாபாரிகள் வரத்து அதிகரித்திருந்ததால், 2.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. புதுச்சத்திரம் யூனி யன், புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, நாமக்கல், புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, மாடுகளை வாங்கிச்செல்ல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் அதிகளவில் மாடுகளை வாங்கி சென்றதால், 2.50 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.