ஆடி இரண்டாவது வெள்ளி பக்தர்கள் பக்தி பரவசம்
ப.வேலுார், ப.வேலுார் காவிரி ஆற்றுக்கு செல்லும் சாலையில், பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி, இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று, அம்மனுக்கு கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.முன்னதாக, காலை, 6:00 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் போன்ற, 18 வகை வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல், மல்லசமுத்திரம் பெரிய மாரியம்மன், வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சேந்தமங்கலம், பழையபாளையம் அங்காள பரமேஸ்வரி, பெரிய மாரியம்மன், தேவி கருமாரியம்மன், பகவதி அம்மன், சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன், காந்திபுரம் தேவி கருமாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.பள்ளிப்பாளையம் ஒன்பதாம்படி ஆற்றோரத்தில் அன்னை ஸ்ரீ புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி வெள்ளியையொட்டி, சந்தான லட்சுமி அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.