அ.தி.மு.க., நகர செயலாளரை கண்டித்து தி.மு.க., சார்பில் போட்டி ஆர்ப்பாட்டம்
ராசிபுரம், ராசிபுரம், அ.தி.மு.க., நகர செயலாளரும், முன்னாள் சேர்மனுமான பாலசுப்ரமணியம், வீட்டுமனை நிலம் தருவதாக கூறி பணம் வசூல் செய்துவிட்டு தற்போது தரவில்லை என்ற புகார்படி, கைது செய்யப்பட்டார். தற்போது, நிபந்தனை ஜாமினில் வந்த அவர், ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனியல் கையெழுத்திட்டு வருகிறார். ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை மாற்றும் திட்டத்தை பாலசுப்ரமணியம் எதிர்த்ததால் தான், அவரை ஆளுங்கட்சியினர் சிறைக்கு அனுப்பினர் எனக்கூறி, நேற்று முன்தினம், அ.தி.மு.க, சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பழிவாங்கும் நடவடிக்கை குறித்தும் நகராட்சி நிர்வாக சீர்கேடு குறித்தும் பேசினர்.இந்நிலையில், நேற்று முன்தினம், அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்திய அதே இடத்தில், நேற்று தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் சங்கர், சேர்மன் கவிதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஏழை, எளிய மக்களிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததையும், மோசடி செய்த நிலத்தை உரியவர்களிடம் திருப்பி தரக்கோரியும், அ.தி.மு.க., நகர செயலாளார் பாலசுப்பிரமணியனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.