போதையில் பஸ் ஓட்டிய டிரைவர் நாமக்கல் போலீசில் ஒப்படைப்பு
நாமக்கல், 'குடி'போதையில் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவரை பயணிகள் பிடித்து, நாமக்கல் போலீசில் ஒப்படைத்தனர்.ஈரோட்டிலிருந்து நாமக்கல் வழியாக துறையூருக்கு, நேற்று காலை, 9:00 மணிக்கு அரசு மப்சல் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை, நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டியை சேர்ந்த நவீன்ராஜ், 28, ஓட்டினார். பஸ்சில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 'குடி'போதையில் இருந்த டிரைவர் நவீன்ராஜ், பஸ்சை தாறுமாறாக ஓட்டிவந்தார். இதையறிந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே எர்ணாபுரம் வந்தபோது, டிரைவரை தாக்க பயணிகள் முயன்றனர். அப்போது, சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது பஸ் மோதி நின்றது.பதறிபோன பயணிகள் கீழே இறங்கி, நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், டிரைவரை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து, தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தின், நாமக்கல் பணிமனை கோட்ட மேலாளர் செங்கோட்டுவேல் விசாரித்து வருகிறார். டிரைவர் நவீன்ராஜ், பணியில் சேர்ந்து, ஒன்றரை ஆண்டுகளே ஆவது குறிப்பிடத்தக்கது.