உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் மாஜி அ.தி.மு.க., நகராட்சி தலைவர் நிலமோசடி வழக்கில் கைது

ராசிபுரம் மாஜி அ.தி.மு.க., நகராட்சி தலைவர் நிலமோசடி வழக்கில் கைது

ராசிபுரம், ராசிபுரம், அ.தி.மு.க., முன்னாள் நகராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் முன்னாள் நகராட்சி தலைவர் மகாலிங்கம். இவரது மகன் பாலசுப்பிரமணியம், 50, அ.தி.மு.க., நகர செயலராக உள்ளார். இவரும் கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் நகராட்சி தலைவராக பதவி வகித்தவர். 2013ம் ஆண்டு இவரும், தற்போது அ.ம.மு.க., மாவட்ட செயலராக உள்ள பழனிவேல் ஆகியோர் இணைந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டம், வீராணத்தை சேர்ந்த பத்மாவதி, 63, ஆன்லைன் மூலம் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,க்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: ராசிபுரத்தை சேர்ந்த பழனிவேல், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.கே. சமுத்திரம் என்ற இடத்தில், ராயல் ஹைடெக் சிட்டி என்ற பெயரில் வீட்டுமனை பிரித்திருந்தனர். இதில், வீட்டுமனை ஒதுக்கி தருவதாக கூறி, மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தி வந்தேன். 50 மாத முடிவில், 1.15 லட்சம் ரூபாய் செலுத்தியிருந்தேன். பணம் செலுத்தியது மற்றும் அவர்கள் கொடுத்த ஒப்பந்த பத்திரம் ஆகியவை என்னிடம் உள்ளன.ஆனால், தவணை முடிந்த பிறகு கிரயம் செய்து தரக்கோரி, நான் இருவரிடமும் பணம் வசூல் செய்த ஏஜெண்டுகளிடமும் கேட்டு வந்தேன். கடந்த, 14ம் தேதி ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள, ராயல் சிட்டி அலுவலகத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று பேர் என்னிடம் வந்து, நீ கேட்டவுடன் உனக்கு வீட்டு மனையை கிரயம் செய்து தர வேண்டுமா என்று மிரட்டினர். தகாத வார்த்தையால் திட்டினர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுத்து, நிலம் அல்லது பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இதேபோல் ஏமாந்த பலரும் ஆன்லைனில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை, பாலசுப்பிரமணியத்தை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை