கர்ப்ப கால சர்க்கரை குறைபாட்டை தவிர்ப்பது எப்படி?
ஈரோடு கே.எம்.சி.எச்., ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, நாளமில்லா சுரப்பியல் சிறப்பு மருத்துவர் அனிதா சோமசுந்தரம், சர்க்கரை நோய் (நீரிழிவு) குறித்து கூறியதாவது: சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது ஏற்படும் ஒரு நாள்பட்ட மருத்துவ நிலை ஆகும். இது எல்லா வயதினரையும் பாதிக்கிறது. கடந்த, 2023ல் தி லான்சட் மருத்துவ ஆய்விதழ், நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பிகள் பற்றி வெளியிட்ட ஆய்வில், 10 கோடி மக்களுக்கும் அதிகமானோர், இந்தியாவில் நீரிழிவு குறைபாடுடன் வாழ்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 13.6 கோடி மக்கள் சர்க்கரை நோயாளிகளாக மாறக்கூடிய அபாய நிலையில் உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ளன. டைப் 1 வகை, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் காணப்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் தேவைப்படுகிறது. டைப் 2 குறைபாடு பொதுவான ஒன்றாகும். இந்தக்குறைபாடு பாதிக்கப்பட்ட நபர்களிடம், 90 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. கர்ப்ப கால சர்க்கரை குறைபாடு, கர்ப்ப காலத்தில் கண்டறியப்படும் நீரிழிவு குறைபாடாகும். இந்தியாவில் இந்த வகை நீரிழிவு ஆண்டுக்கு, 50 லட்சம் பெண்களை பாதிக்கிறது. இது பொதுவாக பிரசவத்துக்கு பிறகு சரியாகிவிடும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பிற்காலத்தில் டைப் 2 வகை நீரிழிவு குறைபாட்டால், 50,- 60 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக ஆரம்ப காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பது பலருக்கு தெரியாது. இதை கண்டறிய உணவுக்கு முன், உணவுக்கு பின் சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனையை, எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். ஓரல் குளுக்கோஸ் டெலிரென்ஸ் டெஸ்ட், பொதுவாக கர்ப்ப கால நீரிழிவு நோயை கண்டறியும் பரிசோதனையாகும். இது கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சோதனையை வீட்டிலேயே செய்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அவ்வப்போது கண்காணித்து வரவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.