குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் துாக்கிட்டு தற்கொலை
நாமக்கல்:குடும்ப தகராறில், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல், சந்தைப்பேட்டைபுதுார் பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூபதி, 47; லாரி பாடி பட்டறை தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி, 39; இவர்களது மகள் மகேஸ்வரி, 20, மகன் தினேஷ்குமார், 14; இதில், மகள் மகேஸ்வரி, நாமக்கல் அரசு கல்லுாரியில், எம்.எஸ்சி., ஜூவாலஜி, முதலாமாண்டு படிக்கிறார். மகன் தினேஷ்குமார், மூன்றாண்டுகளுக்கு முன், கிணற்றில் விழுந்து இறந்துவிட்டார்.இதனால், மனமுடைந்த பூபதி, அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து, மனைவி கலைச்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனைவி கலைச்செல்வி, கோபித்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதன் காரணமாக விரக்தியில் இருந்த பூபதி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த மனைவி கலைச்செல்வியை, கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். தொடர்ந்து, போர்டிகோவில், சேலையில் துாக்கிட்டு பூபதி தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு அறையில் துாங்கிக்கொண்டிருந்த மகள் மகேஸ்வரி எழுந்து வந்து பார்த்தபோது தாய் கலைச்செல்வி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து போர்டிகோவில் தந்தை பூபதி துாக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி அழுதார்.தகவலறிந்த நாமக்கல் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக, மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.