| ADDED : ஜூலை 10, 2024 07:22 AM
நாமகிரிப்பேட்டை: ஆமணக்கில் காவடி புழு தாக்குதலை தவிர்க்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் ஆமணக்கு செடியில் காவடி புழு தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. அதன் அறிகுறி, ஆமணக்கு இலையை, காவடி புழுக்கள் சாப்பிட்டு சேதப்படுத்தி காணப்படும். வளார்ச்சியடைந்த புழு, கருமை நிற தலையை கொண்டிருக்கும். உடலின் மேற்பரப்பில் சிகப்புநிற புள்ளிகள் காணப்படும். அந்துப்பூச்சி, சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். இதை நேரடியாக கட்டுப்படுத்த, கைகளால் புழுக்களை சேகரித்து அழிக்கலாம். அல்லது வேப்பம் சாறு, 5 சதவீதம் தெளித்து காவடி புழுவின் முட்டை குவியலை அளிக்கலாம் அல்லது ட்ரைக்கோகிரைமா முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு, 20,000 வரை படர விட்டு காவடிப்புழுவின் முட்டை குவியலை அழிக்கலாம். அல்லது குளோரிபைபாஸ், 2 மி.லி., மருந்தை, 1 லிட்டார் தண்ணீரில் கலந்துதெளிக்கலாம். பறவை இருக்கையை ஏக்கருக்கு, 10 எண்கள் வீதம் அமைத்து காவடிப்புழுவின் தாக்குதலை தவிர்க்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.