வடகிழக்கு பருவ மழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க யோசனை
ராசிபுரம்,வடகிழக்கு பருவ மழை காலத்தில், தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திகா யோசனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வடகிழக்கு பருவமழை காரணமாக, வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்து மழைநீர் தேங்கி நிற்பதை தவிர்க்க வேண்டும். மழைநீர் வடிந்த பின் நடவு மற்றும் விதைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். காய்கறி பயிர்களில் அழுகல் நோயை கட்டுப்படுத்த, நோய் தடுப்பு மருந்தான காப்பர் ஆக்ஸி குளோரைடு துார் பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும், காய்கறி நாற்றுகள் நடவு செய்யும்போது, 5 கிராம் டிரைகோடெர்மா விரிடி போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணியை, 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றுகளின் வேர் பகுதிளை, 20 நிமிடம் மூழ்கிய பின் நடவு செய்வதன் மூலம் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.காற்றால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க, காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து செடிகள் சாயாதவாறு பாதுகாத்தல், மரங்களை சுற்றி மண் அணைத்து பாதுகாப்பு கொடுத்தல், மழைநீர் வடிந்த பின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாழை பயிரில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும். மேலும், 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்.பல்லாண்டு பயிர்களான மா, கொய்யா, எலுமிச்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் காய்ந்த, பட்டுபோன மரத்தின் கிளைகளை அகற்றுவதுடன், மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். தென்னை மரத்தில் தேங்காய், இளநீர் அறுவடைக்கு பின், பழைய ஓலைகளை அகற்றி மரத்தின் சுமையை குறைக்க வேண்டும். அதிக மழைப்பொழிவு நாட்களில் உரம் வைத்தல் மற்றும் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். வெங்காயம் மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு உரிய காலத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.