உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருக்குறளை அடுத்த தலைமுறையிடம் சேர்ப்பது நம் கடமை கலெக்டர் துர்கா மூர்த்தி பேச்சு

திருக்குறளை அடுத்த தலைமுறையிடம் சேர்ப்பது நம் கடமை கலெக்டர் துர்கா மூர்த்தி பேச்சு

நாமக்கல், ''திருக்குறளில் அடங்கியுள்ள வாழ்வியல் தத்துவங்களை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நம் தலையாய கடமை,'' என, திருக்குறள் திருப்பணிகள் துவக்க விழாவில், கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 'திருக்குறள் திருப்பணிகள்' நிகழ்ச்சி, நாமக்கல் - மோகனுார் சாலை, கிளை நுாலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:ஒவ்வொரு மாவட்டத்திலும், திருக்குறள் திருப்பணிகள் தொடர்பாக முகாம் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள், வாரந்தோறும், சனிக்கிழமை காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை, 30 நாட்கள் நடக்கிறது. 10,000 ஆண்டுகளுக்கு முன், இரண்டு அடியில் குறளை இயற்றி, வாழ்வியலுக்காக வழங்கப்பட்ட நீதி நுாலக உள்ள திருக்குறள், இன்றைய காலத்திற்கும் பொருந்தும் வகையில் கருத்துகள், கோட்பாடுகளுடன் அமைந்துள்ளது.உலக பொதுமறை என்னும் பெயர் பெற்றுள்ள திருக்குறள் வழக்கினை, நாம் அனைவரும் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். திருக்குறள் போன்ற நுால்கள், இலக்கியங்கள், காவியங்கள், காப்பியங்களின் கூறப்படும் உண்மை நிகழ்வுகளை, நம் வாழ்க்கைக்கு பொருத்தமானதாக கொண்டு செல்கிறோமோ, அப்போதுதான் ஒரு மொழி தன்னுடைய இருப்பை நிலைநாட்டும். தமிழ் என்பது ஒரு செம்மொழியாகவும், பழமை வாய்ந்த மொழியாகவும் இன்றளவும் இருக்கிறது என்றால், அதற்கு காரணம் தொடர்ந்து அதனை நம்முடைய வாழ்வில் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம். 1,330 திருக்குறளிலும் அறம், பொருள், இன்பம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. திருக்குறளலில் அடங்கியுள்ள வாழ்வியல் தத்துவங்களை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நம் தலையாய கடமை.இவ்வாறு அவர் பேசினார்.தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் ஜோதி, குழு உறுப்பினர்கள் டாக்டர் குழந்தைவேலு, முனைவர்கள் அரசுபரமேஸ்வரன், தியாகராசன், அங்கராசு, சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ