உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.பாளையத்தில் லுங்கி விற்பனை மந்தம் தயாரிப்பு குறைப்பால் தொழிலாளர் கவலை

ப.பாளையத்தில் லுங்கி விற்பனை மந்தம் தயாரிப்பு குறைப்பால் தொழிலாளர் கவலை

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையத்தில் லுங்கி விற்பனை மந்தமானதால், தயாரிப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 20,000க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. இங்கு, லுங்கி, வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்ட துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலான விசைத்தறி கூடத்தில் லுங்கி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பள்ளிப்பாளையத்தில் உற்பத்தி செய்யும் லுங்கி, இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. லுங்கி விற்பனை அதிகரித்தால், ஆர்டரும் அதிகரிக்கும். இதையடுத்து தயாரிப்பும் அதிகளவு நடக்கும். தற்போது, லுங்கி விற்பனை மந்தமானதால், ஆர்டர் குறைந்துள்ளது. இதனால், தயாரிப்பும் குறைந்துள்ளது.இதுகுறித்து, விசைத்தறி உரிமையாளர் சரவணன் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக லுங்கி விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. இதனால் எதிர்பார்த்த ஆர்டர் இல்லை. ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள லுங்கியும், விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளது. விற்பனையும், ஆர்டரும் அதிகளவில் இருந்தால் பகல், இரவு என, தொடர்ந்து தயாரிப்பு நடக்கும். தற்போது, லுங்கி விற்பனை மந்தத்தால், கடந்த ஒரு மாதமாக, பகல், 'ஷிப்ட்' மட்டுமே இயங்கி வருகிறது. இரவு, 'ஷிப்ட்' நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், விசைத்தறி தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !