மா.திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து கூட்டம் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
நாமக்கல், ஜன. 2-நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், அரசின் திட்டங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலன் காத்திட, 'சிறகுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தொடக்கம்' இயக்கம் சார்பில், கல்லுாரியில் படிக்கும், 30 மாற்றுத்திறனாளி மாணவியருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து சிறப்பு கூட்டம் நடந்தது.கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி, மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அங்கீகரித்து, மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையை உருவாக்கினார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனியே ஒரு துறையை ஏற்படுத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் உரிமையை பாதுகாத்தார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நலவாரியம், மாத உதவித்தொகை, பராமரிப்பு தொகை, கல்வி, திருமணம், மேற்படிப்பு பயில உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினார். அவர் வழியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு, அரசுத்துறை அலுவலர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.