66 படுக்கைகளுடன் சித்த மருத்துவமனை அமைச்சர் இன்று திறக்கிறார்: எம்.பி.,
நாமக்கல் 'நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், 66 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம், இன்று காலை, 10:00 மணிக்கு திறந்து வைக்கிறார்' என, எம்.பி., ராஜேஸ்குமார் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 'இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் இயங்கும் சித்த மருத்துவத்திற்கு, நாமக்கல்லில், 66 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை ஏற்படுத்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். தற்போது, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கென, ஒரு கோடியே, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. இந்த மருத்துவமனையில், 32 வகையான சித்த மருத்துவத்தின் புறமருந்து சிகிச்சைகள், மனநலம் காக்கும் யோகா மருத்துவமும் வழங்கப்பட உள்ளது.மேலும், ஹோமியோபதி துறை சார்ந்த சிகிச்சைகளும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகளும் இங்கு அளிக்கப்படும். தமிழக முதல்வரின் அனுமதியுடன், விரைவில் இந்த மருத்துவமனை, சித்த மருத்துவ கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. திறப்பு விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.