ப.பாளையம் அரசு மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ., தங்கமணி போர்வை வழங்கல்
பள்ளிப்பாளையம் :அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிறந்தநாளையொட்டி, நேற்று, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் மாவட்ட மாணவரணி சார்பில், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி தலைமையில் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றோரம் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு யாகம், பூஜை நடந்தது. இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிப்பாளையம் நகரம் சார்பில், ஆவாரங்காடு பகுதியில் நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார். இதையடுத்து பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு போர்வை உள்ளிட்ட உபகரணங்கள், சிகிச்சை பெற்று வருவோருக்கு பிரட், பிஸ்கட் வழங்கினார்.நகர பேரவை செயலாளர் சுப்ரமணி, பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், மாணவரணி மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சிவகுமார், மாவட்ட கலை பிரிவு செயலாளர் சிங்காரவேலு, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்லதுரை, படவீடு டவுன் பஞ்., செயலாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.