உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மோகனுார் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபாடு

மோகனுார் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபாடு

மோகனுார், ஆடி அமாவாசையை முன்னிட்டு, மோகனுார் காவிரி ஆற்றில், ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.ஆடி அமாவாசை என்பது, முன்னோர்களை நினைவு கூறும் நாளாகும். இந்த நாளில், மக்கள் தர்ப்பணம் போன்ற சடங்குகளை செய்வர், புனித நீராடுவர். ஆடி அமாவாசை அன்று அரிசி, எள், தண்ணீர் மற்றும் பிற புனித பொருட்களை தர்ப்பணமாக படைத்து வழங்குவர். நாமக்கல் மாவட்டம், மோகனுார் காவிரி ஆற்றின் கரையில் உள்ள படித்துறையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஏராளமானோர் நீண்ட வரிசையில் அமர்ந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின் காவிரி ஆற்று நீரில் எள் விட்டு, பிண்டம் வைத்து, மோட்ச தீபம் ஏற்றி புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள், காவிரி ஆற்றின் கரையில் உள்ள அசலதீபேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.* ஆடி மாத அமாவாசையான நேற்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு காலை, 9:00 மணிக்கு வடை மாலை, வெற்றிலை மாலையும், 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபி ேஷகமும் நடந்தது.தொடர்ந்து காவியுடை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. நுாற்றுக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.* எருமப்பட்டி யூனியன் பளையபாளையத்தில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்காளம்மனுக்கு வளையல் மற்றும் தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.* ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன், அங்காளம்மன், எல்லைமாரியம்மன் கோவில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபி ேஷகம் நடந்தது. சீராப்பள்ளி சவுடேஸ்வரி அம்மன், மாரியம்மன், நாமகிரிப்பேட்டை மாரியம்மன், ஆர்.புதுப்பட்டி துலுக்க சூடாமணியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.* சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 6:00 முதல் மாலை வரை மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், கரும்பு சாறு திருநீறு, திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் வெளிப்புற பிரகாரத்தில் உற்சவ மூர்த்தியான முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தார். மூலவர் மற்றும் உற்சவர் தங்க கவசத்தில் அருள்பாலித்தனர்.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நெய் தீபமேற்றி வழிபாடு செய்தனர். அனைவருக்கும், கரும்பு சக்கையால் தயாரிக்கப்பட்ட திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது.* குமாரபாளையம், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், நந்தி பகவான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர். இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில் உள்பட பல கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை