மாவட்டத்தில் ரூ.125.80 கோடியில் திட்டப்பணி விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
நாமக்கல், 'மாவட்டத்தில், 125.80 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்' என, கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் உத்தரவிட்டார்.நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருமான ஆசியா மரியம், நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சிறப்பு சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 70.70 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, பெரியபட்டியில், 57.50 லட்சம் ரூபாய் மதிப்பில், திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் கட்டுமான பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.தொடர்ந்து, விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 118.50 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணி, புதுச்சத்திரம் ஒன்றியம், மின்னாம்பள்ளி, தத்தாதிரிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ், 117.43 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை, ஆண், பெண் கழிப்பறைகள், குடிநீர் தொட்டி ஆகிய பணிகளையும் ஆய்வு செய்தார். இதையடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மொத்தம், 125.80 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.