எருமப்பட்டி: அதிகாரிகளை கண்டித்து, முத்துக்காப்பட்டி பஞ்., தலைவர் உண்டு உறங்கும் போராட்டம் நடத்தி வருகிறார்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே முத்துக்காப்பட்டி பஞ்., மேதராமதேவி கிராமத்தில் சாலையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஞ்., தலைவர் அருள்ராஜேஸ் கடந்த, 24ல் போராட்டம் நடத்தினார். அப்போது, 29ல் ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவதாக அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இதனால், போராட்டம் கை விடப்பட்ட நிலையில், அந்த இடத்தை தற்போது வரை அதிகாரிகள் அளவீடு செய்து கொடுக்கவில்லை. இதை கண்டித்து, நேற்று மீண்டும் பஞ்., தலைவர் அருள்ராஜேஸ் திடீரென பஞ்., அலுவலகத்தில் உண்டு உறங்கும் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினார். இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அருள் ராஜேஸ் கூறுகையில்,''நபார்டு மூலம் புதிய சாலை அமைக்க, நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். ஆனால், வருவாய் துறையினர் அளவீடு செய்யவில்லை, எனவே, ஆர்.டி.ஓ., உத்தரவு படி, படிவம்-1ஐ தாசில்தார் தரும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.