நாமக்கல்: 'பள்ளிக்குச் செல்லும்போது, தொடர்ந்து வரும் இரண்டு வாலிபர்கள் சில்மிஷம் செய்வதாகவும், கேட்டால் ஆஸிட் வீசி எரித்து விடுவதாகவும் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பள்ளி மாணவி ஒருவர், எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளார்.அம்மனுவில் கூறியிருப்பதாவது: நான், நாமகிரிப்பேட்டை, தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருகிறேன். மாலை பள்ளி முடிந்ததும், அரசு டவுன் பஸ் மூலம் ஊர் திரும்புவது வழக்கம். அவ்வாறு பஸ்சில் வரும்போது, தொப்பம்பட்டியை சேர்ந்த கந்தன் மகன் குமார், குப்பண்ணன் மகன் ஆனந்தராஜ் ஆகியோர், அதே பஸ்சில் வந்து என்னையும், என்னுடன் சேர்ந்த மாணவியரையும் சில்மிஷம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை எச்சரித்தேன். ஆனால், அதற்கு வீட்டில் சொன்னால் உன் முகத்தில் ஆஸிட் ஊற்றி எரித்து விடுவேன்; பைக்கில் கடத்திச் சென்றுவிடுவேன் என, மிரட்டுகின்றனர். எனக்கு பள்ளி செல்லவே பயமாக உள்ளது. மறுநாள், நாமகிரிப்பேட்டை போலீஸில் புகார் செய்தேன். புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் அவர்கள், எனக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். இப்பிரச்னை குறித்து கடந்த, 8ம் தேதி கலெக்டரிடம் புகார் மனு அளித்தோம். அதற்கும் நடவடிக்கை இல்லை. அதற்கு அந்த வாலிபர்கள்,'நீ எங்கு சென்று புகார் கொடுத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. பேசாமல் வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்' என, மிரட்டுகின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.