ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அருகே வங்கியில் பணம் செலுத்துவதற்காக டூவீலரில் சென்ற பெண்ணின் கண்ணில் மிளகாய்பொடி தூவி, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பறித்துச் சென்ற வழக்கில், வாலிபர் ஒருவரை, தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 69 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சிக்கு உட்பட்ட கல்குறிச்சியில் பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் குப்புசாமி (60). அவரது மனைவி மனோன்மணி கடந்த, 8ம் தேதி காலை 11.30 மணிக்கு, பெட்ரோல் பங்கில் வசூலான, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பையில் எடுத்துக்கொண்டு, வங்கியில் செலுத்துவதற்காக தனது டூவீலரில் தொ.ஜேடர்பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார்.
அப்போது, தொ.ஜேடர்பாளையம் அருகே தைலாமுட்காடு என்ற இடத்தில் வந்துபோது, பின்னால் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், திடீரென மனோன்மணி சென்ற டூவீலரை வழிமறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை கீழே தள்ளி கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்களை பிடிப்பதற்காக, டி.எஸ்.பி., ராஜா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை 5 மணிக்கு, ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீஸார், அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த வாலிபர் பெயர் தமிழ்ச்செல்வன் (21) என்பதும், மெட்டாலா அருகே உள்ள கன்னிமார் ஊற்று பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், பெண்ணை வழிமறித்து மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டார்.
அதை தொடர்ந்து வாலிபரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து, 69 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.