ராசிபுரம்: 'உச்சநீதி மன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தி, சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது' என, விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி சிந்தனையாளர் மன்றம் சார்பில், 65வது சுதந்திர தினவிழா, ராசிபுரத்தில் கொண்டாடப்பட்டது. மன்றச் செயலாளர் ஞானமணிகண்டன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சரவணன் வரவேற்றார். பொருளார் வி.சரவணன், நகரத் தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் நாம் அயராது உழைப்பதுமட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் அமைதியுடனும், சகோதரத்துவ மனப்பான்மையுடன் வாழ உரிய வழிகளை எடுத்துரைக்க வேண்டும். உச்சநீதி மன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தி, சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரவிராஜ பாண்டியன் குழு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணம் குறித்து, அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் அதனை பொருட்படுத்தாமல் மூன்று பங்கு கட்டணம் வசூல் செய்துள்ளது. அத்தகைய பள்ளி, கல்லூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கு, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களால் பாலியல் தொல்லை ஏற்படுகிறது. அதனால், ஒருசில மாணவியர் தற்கொலை செய்யும் அவல நிலை ஏற்படுகிறது.
அதை தடுக்க, மன்றம் சார்பில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாதந்தோறும் கலந்துரையால் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத்லைவர் ராஜா, செய்தி தொடர்பாளர் முருகேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ரஞ்சிதம், கல்வி சிந்தனையாளர் மன்ற ஆலோசகர்கள் தங்கவேல், நல்லதம்பி, பொருளாளர் ஹரிஹரன், செயற்குழு உறுப்பினர் பத்மராஜ், இணைச் செயலாளர் நைனாமலை உள்பட பலர் பங்கேற்றனர்.