நாமக்கல்: 'அரசியல் கட்சி, வேட்பாளர்கள், எந்த ஒரு தனி நபருடைய நிலம், கட்டிடம் ஆகியவற்றின் மீது கொடிக் கம்பம் நடுதல், போஸ்டர் ஒட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது' என, மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளரோ மற்றும் முகவரோ பல்வேறு மொழி பேசும் இனத்தினர் ஆகியோரிடையே வேற்றுமை உணர்வுகளை ஏற்படுத்தக் கூடாது. வழிபாட்டுத் தலங்களாகிய கோவில்கள், மசூதிகள், மாதா கோவில்கள் ஆகியவற்றை தேர்தல் பிரச்சார இடங்களாக பயன்படுத்தக் கூடாது. வாக்காளருக்கு லஞ்சம் கொடுக்கக் கூடாது. வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி சென்று வர வாகன வசதி ஏற்படுத்தி தரக்கூடாது. தேர்தல் தினம், ஓட்டுப்பதிவு முடிய நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்திலிருந்து, 48 மணி நேரத்துக்கு முன் கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது. ஓட்டுச்சாவடியில் இருந்து, 200 மீட்டர் தொலைவிற்குள் ஓட்டு சேகரித்தல் கூடாது.
அரசியல் கட்சி, வேட்பாளர், கட்சித் தொண்டர்கள், எந்த ஒரு தனி நபருடைய நிலம், கட்டிடம் முதலியவற்றின் மீது கொடிக்கம்பம் நடுதல், போஸ்டர் ஒட்டுதல் போன்றவற்றை, சம்மந்தப்பட்டோர் அனுமதியின்றி மேற்கொள்ளக்கூடாது. ஆள் மாறாட்டம், தவறான பெயரில் ஓட்டளிக்கக் கூடாது. உரிய அலுவலரின் அனுமதி பெறாமல், எந்த கட்சி வேட்பாளரும் ஒலிப் பெருக்கியை பயன்படுத்தக் கூடாது. காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஊரக நகர்ப்புறங்களில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்த வேண்டும். மீறுவோரிடம் இருந்து சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்து தேர்தல் விதிகளில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல் செலவிடக்கூடாது. தேர்தல் செலவிற்கான கணக்குகளை, உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வைத்திருக்க வேண்டும். அதற்கு, நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட, 30 நாட்களுக்குள் உரிய அலுவலரிடம் வழங்க வேண்டும். எந்த ஒரு கட்சியின் வேட்பாளரும், உரிய அலுவலரின் அனுமதியின்றி பொதுக்கூட்டங்களையோ, ஊர்வலங்களையோ அனுமதியின்றி நடத்தக் கூடாது. ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்பவர்கள், தங்களுடைய ஊர்வலத் திட்டம் குறித்து போலீஸாருக்கு முன்னதாக தகவல் அளிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், தேர்தல் காலங்களில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.